சென்னையின் எஃப்.சி ஒப்பந்தத்தை நீட்டித்தார் பிரேசில் டிஃபண்டர் எலி சாபியா

சென்னை, ஆகஸ்ட் 12, 2020: பிரேசில் டிஃபண்டர் எலி சாபியா, சென்னையின் எஃப்.சி அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த 31 வயது வீரர், 2020-21 சீசனிலும் இரண்டு முறை ஐ.எஸ்.எல் சாம்பியன் சென்னை அணிக்காக விளையாடப்போகிறார்.

கடந்த சீசனில், இறுதிப் போட்டி வரை முன்னேறி அசத்திய சென்னையின் அணி ஆடிய 21 போட்டிகளில் 19 போட்டிகளை ஸ்டார்ட் செய்தார். தொடர்ந்து எட்டு போட்டிகளில் தோற்காமல் அரையிறுதிக்கு முன்னேறும் ஒரு அணி, தடுப்பாட்டத்தில் அரணாய் இருக்கவேண்டும். தன் அனுபவமும், நிதானமும் கலந்த ஆட்டத்தால் சென்னையின் அணியின் தடுப்பாட்டத்தில் மிக முக்கிய அங்கம் வகித்தார் இந்த அனுபவ வீரர். ஒரு கோல், ஒரு அசிஸ்ட் என களத்தின் இன்னொரு முணையிலும் அவரது பங்களிப்பு இருந்தது. அந்த ஒரு கோலும் கோவா அணிக்கெதிராக 4-1 என வெற்றி பெற்ற அரையிறுதியின் முதல் லெக்கில் அடிக்கப்பட்டது!

“சென்னையின் எஃப்.சி அணியோடு தொடர்வதைப் பற்றி நினைக்கையில், அந்த சந்தோஷத்தை வெளிப்படுத்த வார்த்தையே இல்லை. எனக்கும், என் குடும்பத்துக்கும் இந்த கிளப்பும், ரசிகர்களும் கொடுத்த ஆதரவு ஈடு இணையற்றது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில் நாம் தோற்றுவிட்டோம். அதனால், நாம் முடிக்கவேண்டிய விஷயம் இன்னும் இருக்கிறது. இந்த புதிய சீசனில், புதிய நம்பிக்கையோடு களமிறங்கி, சென்னைக்கு மூன்றாவது ஐ.ஸ்.எல் கோப்பையை பெற்றுத் தருவோம்” என்று பிரேசிலுள்ள தன் வீட்டிலிருந்து பேசியிருக்கிறார் எலி சாபியா.

“கடின உழைப்பு, மன உறுதி, கன்சிஸ்டென்ஸி – இவை அனைத்தின் மறு உருவம் எலி (சாபியா). அவர் டெக்னிகலி மிகவும் திறமையானவர் மட்டுமல்ல, களத்திற்குள்ளேவும் வெளியேவும் நல்ல தலைவர். அவரிடமிருந்து இளம் இந்திய வீரர்கள் கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது. அவர் நம்முடனான ஒப்பந்தத்தை நீட்டித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் தொடர்ந்து சென்னையின் எஃப்.சி அணிக்காக சிறப்பாகச் செயல்படுவார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார் சென்னையின் எஃப்.சி இணை உரிமையாளர் வீதா தானி.

சென்னையின் அணிக்காக நான்காவது சீசனில் ஆடத் தயாராகிக்கொண்டிருக்கும் எலி சாபியா, பிரேசிலில் இருந்துகொண்டு தன் ஃபிட்னஸில் அதிக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார். இதுவரை சென்னையினுக்காக அனைத்துத் தொடர்களிலும் சேர்ந்து 59 போட்டிகளில் ஆடியிருக்கிறார்.

இந்தியாவில், அவரது முதல் சீசன் 2016-ம் ஆண்டு சென்னையின் எஃப்.சி அணியோடு தொடங்கியது. அதன் பிறகு, பிரேசிலின் செர்தாஜினோ எஃப்.சி அணியோடு சில காலம் ஆடிய அவர், சவூதி அரேபியாவின் அல் ரேத் அணியில் இணைந்தார். அதன் பின் 2018-19 சீசனுக்கு மீண்டும் சென்னையின் எஃப்.சி அணியில் இணைந்தவர், கடந்த 2 ஆண்டுகளாக அணியின் தடுப்பாட்டத்தில் முக்கிய அங்கமாக விளங்கி வருகிறார். பலமான, தீர்க்கமான ஒரு வீரரான சாபியா, மார்ச் 2019 முதல் ஜூன் 2019 வரையிலான காலகட்டத்தில், AFC கோப்பையின் குரூப் ஸ்டேஜ், சூப்பர் கப் தொடர் என, 12 போட்டிகளில் 7 கிளீன் ஷீட்கள் வைக்க சென்னையின் எஃப்.சி-கு உதவினார்.

சென்னையின் எஃப்.சி அணியின் 13-ம் நம்பர் ஜெர்ஸிக்கு சொந்தக்காரரான எலி சாபியா, சா பாலோவில் பிறந்தவர். உள்ளூர் கிளப்பான பாலிஸ்டாவின் அகாடெமியில் இணைந்து, அப்படியே சீனியர் டீமுக்குள் நுழைந்தார் அவர். அதன்பின் பல முன்னணி அணிகளுக்கு லோன் மூலம் ஆடினார். பிரேசிலின் முன்னணி அணிகளான சான்டோஸ், அத்லெடிகோ பரனேன்ஸ் அணிகளுக்கு ஆடியவர், ஸ்விட்சர்லாந்தின் டாப் டிவிஷன் அணியான லசேன் எஃப்.சி அணிக்கும் ஆடியிருக்கிறார்.