சென்னையின் எஃப்.சி ஒப்பந்தத்தை நீட்டித்த ஜெர்ரி லால்ரின்சுவாலா!

சென்னை, ஜூலை 30,2020 : சென்னையின் எஃப்.சி அணியுடன் இன்னும் சில ஆண்டுகள் தொடர்வதற்கான புதிய ஒப்பந்தத்தை ஜெர்ரி லால்ரின்சுவாலா கையெழுத்திட்டுள்ளார் என்பதை மகிழ்ச்சியோடு அறிவிக்கிறோம்!

ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள இந்த மிசோரம் லெஃப்ட் பேக், ஐந்தாவது சீசனாக சென்னையின் எஃப்.சி அணியோடு தொடரவிருக்கிறார். கடந்த 4 சீசன்களில் சென்னையின் அணிக்காக 65 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 2017-18 இந்தியன் சூப்பர் லீக் சாம்பியனான சென்னையின் அணியில் முக்கிய அங்கம் வகித்த ஜெர்ரி, ஒரு போட்டியைத் தவிர்த்து மற்ற அனைத்துப் போட்டிகளிலும் பங்கேற்று அணியின் வெற்றிக்குப் பெரும் பங்காற்றினார்.

தன்னுடைய 22-வது பிறந்தநாளுக்கு ஒரு நாள் முன்பு, இரு முறை ஐ.எஸ்.எல் சாம்பியனான சென்னையின் அணியுடன் ஒப்பந்தத்தைப் புதுப்பித்திருக்கிறார். 9 முறை இந்திய அணிக்காக ஆடியுள்ள ஜெர்ரியின் பிறந்த நாள் ஸ்பெஷலாக இந்த அறிவிப்பு வந்துள்ளது.

“இன்னொரு மறக்க முடியாத சீசனுக்குப் பிறகு, சென்னையின் அணியோடு தொடர்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நம் கிளப்புடனான பயணம் எனக்கு நல்ல பாடமாக அமைந்திருக்கிறது; கடந்த ஆண்டுகளில் கிளப்பிலிருந்த அனைவருமே என்னை நல்ல முறையில் வடிவமைத்திருக்கிறார்கள். இன்று நான் ஒரு கால்பந்து வீரராக இருப்பதில், அவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. மீண்டும் சென்னையின் எஃப்.சி ஜெர்ஸி அணிந்து, நம் ஆதரவாளர்களுக்காகப் போராடக் காத்திருக்கிறேன். என்னுடைய ஐந்தாவது சீசன் அட்டகாசமான சீசனாக இருக்கும் என்று எதிர்பார்த்திருக்கிறேன்” என்று கூறிய ஜெர்ரி, 2019-20 சீசனில் 14 போட்டிகளில், 2 அசிஸ்ட்கள் செய்தார்.

ஜெர்ரி பற்றிப் பேசிய சென்னையின் எஃப்.சி இணை உரிமையாளர் வீதா தானி, “ஜெர்ரி ஓர் அட்டகாசமான வீரர். கடந்த சில ஆண்டுகளாக சென்னையின் எஃப்.சி-யில் அவருடைய திறமை சரியான முறையில் மேம்படுத்தப்பட்டிருக்கிறது. நம்முடைய அணியில் முக்கிய அங்கம் வகித்து, தொடர்ந்து சிறப்பான பங்களிப்பைக் கொடுக்கும் அவரது வளர்ச்சியைப் பார்ப்பதற்குப் பெருமையாக இருக்கிறது. நம்முடைய கிளப்பில் மேலும் முன்னேற்றம் கண்டு, இன்னும் சிறப்பான பங்களிப்பைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம்” என்று கூறினார்.

AIFF எலைட் அகாடெமியிலிருந்து வந்தவரான ஜெர்ரி, பிரான்ஸின் மெட்ஸ் எஃப்.சி-யோடு சென்னையின் எஃப்.சி இணைந்து நடத்திய பயிற்சி முகாமினால் பெரிய அளவு பயனடைந்தார். ஜெர்ரியின் டீம் மேட் அனிருத் தாபாவும் அந்தப் பயிற்சி முகாமல் அவரோடு பயிற்சி பெற்றார்.

அந்தப் பயிற்சிக்குப் பிறகு சென்னையின் எஃப்.சி கிளப்போடு இணைந்து கலக்கிய ஜெர்ரிக்கு, முதல் ஐ.எஸ்.எல் வாய்ப்பை 2016 சீசனில் வழங்கினார், அப்போதைய பயிற்சியாளர் மார்கோ மடரசி. அந்தச் சமயத்தில், கிளப்பின், ஐ.எஸ்.எல் தொடரின் இளம் அறிமுக வீரர் அவர்தான்! அந்த சீசனில் 13 போட்டிகளில் ஆடிய இந்த அய்சால் இளைஞர், 2 அசிஸ்ட்கள் செய்ததோடு ஒரு கோலும் அடித்தார். கோவா அணிக்கெதிரான போட்டியில் அவர் அடித்த அட்டகாசமான ஃப்ரீ கிக் கோல், இவரை ஐ.எஸ்.எல் தொடரின் இளம் கோல் ஸ்கோரராக்கியது. 2016 ஐ.எஸ்.எல் சீசனின் ‘வளர்ந்து வரும் வீரர்’ விருதை வென்றவரும் இவரே! அடுத்து, டி.எஸ்.கே சிவாஜியன்ஸ் அணிக்காக லோன் மூலம் 19 ஐ-லீக் போட்டிகளில் (2016-17 சீசன்) விளையாடி அசத்திய ஜெர்ரி, ஐ-லீக் தொரின் வளர்ந்து வரும் வீரர் விருதையும் வென்றார்.

2017-18 சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற சென்னையின் அணிக்கு மிகப்பெரிய பங்காற்றிய ஜெர்ரி, அணியின் முதல் ஆசிய தொடரிலும், அடுத்த ஆண்டு நடந்த முதல் சூப்பர் கப் தொடரிலும் முக்கிய அங்கமாக விளங்கினார். 2018-19 சீசனில் கடைசி இடம் பிடித்திருந்தாலும், அடுத்த சீசனில் ஓர் அட்டகாசமான கம்பேக்கை அரங்கேற்றிய சென்னையின் எஃப்.சி, ஆறு ஆண்டுகளில் மூன்றாவது ஐ.எஸ்.எல் ஃபைனலுக்குள் நுழைந்தது.

பல்வேறு வயது பிரிவுகளில் இந்திய அணிக்காக விளையாடிய ஜெர்ரி, 2017-ம் ஆண்டு நேபாள அணிக்கெதிரான நட்புறவுப் போட்டியில் சீனியர் அணிக்கு அறிமுகமானார். இளம் வயதிலேயே நல்ல அனுபவம் அடைந்திருக்கும் ஜெர்ரி, இனி வரும் ஆண்டுகளில் கிளப்புக்கும், தேசிய அணிக்கும் மிகப்பெரிய பங்களிப்பைக் கொடுக்கக் காத்திருக்கிறார்.