சென்னையின் எஃப்.சி கோல் கீப்பர் கரண்ஜித் சிங் ஒப்பந்தம் ஓராண்டு நீட்டிப்பு

சென்னை, செப்டம்பர் 5, 2020: கோல் கீப்பர் கரண்ஜித் சிங் உடனான ஒப்பந்தம், 2020-21 சீசன் முடியும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். தொடர்ந்து ஆறாவது ஆண்டாக மெரினா அரேனாவில் தன் பயணத்தைத் தொடரவிருக்கிறார் இந்த 34 வயது கோல்கீப்பர். சென்னையின் எஃப்சி, ஐ.எஸ்.எல் சாம்பியன் பட்டம் வென்ற 2015, 2017-18 சீசன்களில், குறிப்பாக, இரண்டாவது முறை சாம்பியன் ஆனதில் இவருக்குப் பெரும் பங்கு உண்டு.

அனுபவம் வாய்ந்த கரண்ஜித் கடந்த சீசனில் கோல் கீப்பராகவும், கோல் கீப்பிங் பயிற்சியாளராகவும் செயல்பட்டார். இந்தமுறை பயிற்சியாளர் சபா லாஸ்லோ தன்னுடன் பணியாற்ற ஒரு கோல் கீப்பிங் கோச்சையும் அழைத்து வருவார் என்பதால், கரண்ஜித் இந்த சீசனில் முழுக்க முழுக்க கோல் கீப்பராகத் தொடர்வார்.

“சென்னையின் எஃப்.சி. என் வீடு போன்றது. என்னைத் தத்தெடுத்துக் கொண்ட குடும்பத்துக்காகவும், அன்பான ரசிகர்களுக்காகவும் இன்னொரு சீசன் இங்கு தொடர வேண்டும் எனும்போது, மறு சிந்தனைக்கு இடமின்றி சம்மதித்துவிட்டேன்’’ என்றார் கரண்ஜித். இவர் சென்னையின் எஃப்.சிக்காக அதிக போட்டிகளில் (62) விளையாடிய, ஆறாவது வீரர் என்ற பெருமைபெற்றுள்ளார்.

“கோல் கீப்பிங் குழுவில் கரண்ஜித் முக்கியமான நபர். அவர் அனுபவத்தில் இருந்தும், நுணுக்கத்தில் இருந்தும் மேலும் ஆதாயம் அடையப் போகிறோம் என்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. சென்னையின் எஃப்.சி.யின் வெற்றிகளில் இவருக்கு முக்கியப் பங்கு உள்ளது. இரு தரப்புக்கும் இடையே பரஸ்பர புரிந்துணர்வு அதிகமாகவே உள்ளது. பயிற்சியின்போதும், போட்டியின்போதும் இளம் கோல் கீப்பர்களுக்கு அவர் வழங்கும் யோசனை பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்கெனவே இரண்டு முறை ஐ.எஸ்.எல் டிராபி வென்றிருக்கும் எங்கள் கிளப்புக்கு, மேலும் பல வெற்றிகளைக் கொண்டு வருவதில் அவர் முக்கிய பங்காற்றுவார்’’ என, சென்னையின் எஃப்.சி.யின் தலைமை பயிற்சியாளர் சபா லாஸ்லோ குறிப்பிட்டார்.

சென்னையின் எஃப்.சி சாம்பியன் பட்டம் வென்ற 2017-18 சீசனில், 20-ல் 7 போட்டிகளில் கிளீன் ஷீட் வாங்கிய பெருமை, கரண்ஜித் செயல்பாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும். ஜம்ஷெட்புர் எஃப்.சி மற்றும் கேரளா பிளாஸ்டர்ஸ் எஃப்.சி.க்கு எதிரான போட்டிகளில், அட்டகாசமாக இரண்டு பெனால்டிகளைத் தடுத்தார். இது, சென்னையின் எஃப்.சி. பட்டம் வெல்ல பெரும் உதவியாக இருந்தது.

அதற்கு அடுத்த ஆண்டு, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய இரு மாத இடைவெளியில் நடந்த, சூப்பர் கப் மற்றும் ஏ.எஃப்.சி டோர்னமென்ட்களில் ஒன்பதில் ஏழு போட்டிகளில் கிளீன் ஷீட் வைத்து தன் முக்கியத்துவத்தை உணர்த்தியிருப்பார் கரண்ஜித். அதிலும், சூப்பர் கப் ஃபைனலில் அவர் செய்த பணி பாராட்டுக்குரியது. கடந்த சீசனில் கவுகாத்தியில் நடந்த நார்த்ஈஸ்ட் யுனைட்டெட் அணிக்கு எதிரான 2-2 டிரா போட்டியில், அவர் சென்னையின் எஃப்.சி.யின் கேப்டனாகவும் செயல்பட்டுள்ளார்.