2020-21 சீசனுக்கான சென்னையின் எஃப்.சி தலைமை பயிற்சியாளராக சபா லஸாலோ நியமனம்!

சென்னை, ஆகஸ்ட் 30, 2020: 2020-21 ஐ.எஸ்.எல் சீசனுக்கான சென்னையின் எஃப்.சி. தலைமை பயிற்சியாளராக சபா லஸாலோவை (Csaba László) நியமனம் செய்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். சர்வதேச மற்றும் கிளப் அளவில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சியாளராக இருந்த அனுபவம் வாய்ந்தவர் இவர். ருமேனியாவில் பிறந்து ஹங்கேரியில் வளர்ந்த இந்த 56 வயது கோச், முதன்முறையாக ஆசியாவில் பயிற்சியாளராக பணியாற்ற உள்ளார். ஆகஸ்ட் 28-ம் தேதி சென்னையின் எஃப்.சி உருவாகி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நன்னாளில் லஸாலோ, நம்முடன் இணைந்துள்ளார்.

“சென்னையின் எஃப்.சி.யின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதை பெருமையாகவும், சந்தோஷமாகவும் உணர்கிறேன். கிளப் தொடங்கி ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த நாளில், இந்தக் கிளப் உடன் இணைவதை பெருமையாகக் கருதுகிறேன். சென்னையின் எஃப்.சி கிளப் ஒரு குடும்பம் போன்றது. திறமைகளைக் கண்டறிந்து வளர்த்துவிடும் கிளப் இது. எது நடந்தாலும் ஆதரவு தரும் ரசிகர்களைக் கொண்டுள்ளது. இந்தக் குடும்பத்துடன் இணைவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சக கோச்சிங் ஸ்டாஃப்களுடன் இணைந்து, சென்னையின் எஃப்.சி கிளப் பெரும் சாதனைகளைப் படைக்க முயற்சிப்போம்’’ என்றார் லஸாலோ,

“சபா லஸாலோவை தலைமைப் பயிற்சியாளராகப் பெற்றதில் பெரு மகிழ்ச்சி. திறமைவாய்ந்த அவர் கிளப்புக்கு மேலும்மேலும் வெற்றிகளை ஈட்டித் தருவார் என நம்புகிறோம். கிளப் மற்றும் தேசிய அணிகளில் பல ஆண்டுகளாக கோச்சிங் செய்த அனுபவம் நிறைந்த அவர், இளம் வீரர்களைக் கண்டறிந்து ஊக்குவிப்பதிலும் வல்லவர். இந்தியாவில் உள்ள தகுதியான இளம் தலைமுறை வீரர்களைக் கண்டறிவதுதான் சென்னையின் எஃப்-சி-யின் பிரதான நோக்கம் என்பதால், இதற்கு லஸாலோ சரியான நபராக இருப்பார். அவரையும் அவரது கோச்சிங் ஸ்டாஃப்களையும் வரவேற்கிறோம். சென்னையின் எஃப்.சிக்காக தொடர்ந்து பல வெற்றிகளைக் குவிக்க அவருக்கும், அவரது குழுவினருக்கும் வாழ்த்துகள்!’’ என்றார், சென்னையின் எஃப்சி இணை உரிமையாளர் வீதா தானி.

இரண்டு தேசிய அணிகள் உள்பட எட்டு நாடுகளில் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவம் நிறைந்தவர் லஸாலோ. வியூகங்கள் வகுப்பதில் பெயர்பெற்ற லஸாலோவின் நோக்கம், எல்லோரையும் கவரும்விதமான கால்பந்தை விளையாடுவதும், சென்னையின் எஃப்.சி மூன்றாவது முறையாக ஐ.எஸ்.எல் சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என்பதும்தான். அவருக்கு உதவும் வகையிலும், அணியின் ‘கோர்’ என்று சொல்லப்படும் பிரதானத்தை வலுப்படுத்தும் வகையிலும் 11 இந்திய வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அதோடு, பிரேசிலைச் சேர்ந்த டிஃபண்டர் எலி சபியா மற்றும் கிரியேட்டிவ் மிட்ஃபீல்டர் ரஃபேல் கிரிவிலாரோவும் ரீடெய்ன் செய்யப்பட்டுள்ளனர்.

ருமேனியா, ஹங்கேரி, அதற்கு முன் மேற்கு ஜெர்மனியில் உள்ள பல கிளப்களில் சென்ட்ரல் மிட்ஃபீல்டராக விளையாடிய லஸாலோ, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தன் 27-வது வயதில் கால்பந்தில் இருந்து ஓய்வுபெற்றார். பயிற்சியாளராக பணியைத் தொடங்கிய ஆரம்ப காலத்தில், பொருஸியா மன்சிங்கிளத்பா பி அணியில் இருந்தபோது, இளம் தலைமுறை வீரர்களை அடையாளம் கண்டார். அதில் ஒருவர்தான், ஜெர்மனியைச் சேர்ந்த பிரபல வீரர் மார்செல் ஜான்சன். இளம் வீரர்களைக் கண்டறிந்து அவர்களை வளர்க்கும் இந்தத் திறமைதான், ஜெர்மனியைச் சேர்ந்த லெஜண்ட் லோதர் மட்டாஸ் உடன், ஹங்கேரி அணியில் பணியாற்றும் வாய்ப்பைக் கொடுத்தது.

ஹங்கேரியில் உள்ள பெரிய கிளப்பான ஃபெரன்கவராஸ் (Ferencváros) கிளப்பில் 2005-ம் ஆண்டு பணியாற்றியபோது, சிறந்த ஹங்கேரி பயிற்சியாளருக்கான விருது வென்றார் லஸாலோ. பின், உகண்டா தேசிய அணியின் பயிற்சியாளராக பொறுப்பேற்றார். அவரது தலைமையில்தான் உகண்டா, FIFA தரவரிசையில் 167-வது இடத்தில் இருந்து 97-வது இடத்துக்கு முன்னேறியது. அதோடு, அவரது வழிநடத்துதலின் கீழ்தான், 24 ஆண்டுகளில் முதன்முறையாக உகண்டா, ஆஃப்ரிக்கா கோப்பை தொடருக்கு முன்னேறியது. பின் அவர், லிதுவேனியா நாட்டின் தலைமை பயிற்சியாளராகவும் சில காலம் பணியாற்றினார்.

அதன்பின் ஸ்காட்லாந்தில் உள்ள ஹார்ட் ஆஃப் மிட்லோதியன் (ஹார்ட்ஸ்) கிளப்பில் சேர்ந்து, அந்த கிளப்பை தரம் உயர்த்தி, முதன்முறையாக UEFA யூரோப்பா லீக்கில் விளையாடுவதை உறுதிப்படுத்தினார். 2008-09 சீசனில் ஹார்ட்ஸ் கிளப், ஸ்காட்டீஸ் பிரிமியர் லீக் பட்டம் வென்றதைத் தொடர்ந்து, ஸ்காட்லாந்து கால்பந்து நிருபர்கள் சங்கம், அவருக்கு அந்த ஆண்டின் சிறந்த மேனேஜர் விருதை வழங்கி கெளரவித்தது.

அதைத் தொடர்ந்து, பெல்ஜியத்தில் உள்ள சார்லெரோய் (Charleroi), ஹங்கேரியில் உள்ள எம்.டி.கே புடாபெஸ்ட் (MTK Budapest), ஸ்லோவேகியாவில் உள்ள டுனஸ்கா ஸ்டெர்டா (Dunajská Streda) கிளப்களில் பணியாற்றி விட்டு, 2017-18 சீசனில் மீண்டும் ஸ்காட்லாந்துக்கு திரும்பி டண்டி யுனைட்டெட் (Dundee United) கிளப்பில் பணியாற்றினார் லஸாலோ. கடைசியாக அவர் ருமேனியாவில் உள்ள செப்ஸி ஓ.எஸ்.கே (Sepsi OSK) கிளப்பில் பயிற்சியாளராக செயல்பட்டார்.