2020-21 சீசனுக்கு 2 புதிய ஃபுல் பேக்குகள் – சுவாந்தே ஃபனாய், ரீகன் சிங் சென்னையின் எஃப்.சி-யில் இணைந்தனர்

சென்னை, செப்டம்பர் 13, 2020: லெஃப்ட்பேக் லால்சுன்மாவியா ஃபனாய் மற்றும் ரைட்பேக் ரீகன் சிங் இருவரும் 2020-21 ஐ.எஸ்.எல் சீசனுக்கான சென்னையின் எஃப்.சி அணியின் அங்கம் ஆகியுள்ளனர் . ‘சுவாந்தே’ என அழைக்கப்படும் மிசோரத்தைச் சேர்ந்த ஃபனாய் (31 வயது), மனிப்பூரைச் சேர்ந்த ரீகன் (29 வயது) இருவரும் ‘ஃப்ரீ டிரான்ஸ்ஃபர்’ மூலம் சென்னையின் எஃப்.சி அணியில் இணைந்துள்ளனர்.

“அணிக்குத் தேவையான ஃபுல் பேக் பொசிஷன்களுக்கு ஃபனாய், ரீகன் இருவரும் நிச்சயம் வலுசேர்ப்பார்கள். அவர்களுடைய ஐ.எஸ்.எல் அனுபவம், கோப்பை வெல்லத் துடிக்கும் நம் அணிக்கு மிகமுக்கிய அங்கமாக இருக்கும். அவர்கள் இருவரையும் சென்னையின் எஃப்.சி குடும்பத்துக்கு வரவேற்கிறேன். அவர்களோடு பணியாற்றுவதை எதிர்பார்த்திருக்கிறேன்” என்று கூறினார் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சபா லாஸ்லோ.

“சென்னையின் எஃப்.சி அணியில் இணைந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. புதிய பயிற்சியாளருடன் இணைந்து பணியாற்றவும், அவரது இலக்குகளை எட்ட வைக்கும் வாய்ப்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். இது ஒரு தனித்துவம் வாய்ந்த ஐ.எஸ்.எல் சீசனாக இருக்கும். கோவாவில் நம் அணியினரைச் சந்திக்கவும், பயிற்சியைத் தொடங்கவும் ஆவலாக இருக்கிறேன்” என்று தன் எதிர்பார்ப்புகள் பற்றிக் கூறினார் சுவாந்தே.

“ஐ.எஸ்.எல் தொடரின் வெற்றிகரமான கிளப்களுள் ஒன்றான சென்னையின் எஃப்.சி அணியில் இணைவது மகிச்சியாக இருக்கிறது. இது மிகச் சிறந்த ரசிகர்களைக் கொண்ட தனித்துவமான அணி. சென்னைக்கு மூன்றாவது ஐ.எஸ்.எல் கோப்பையைக் கொண்டு வருவதற்கு என்னால் முடிந்த முழு உழைப்பையும் கொடுப்பேன் என்று உறுதி கூறுகிறேன்” என்று கூறினார் ரீகன் சிங்.

உயரமான லெஃப்ட் பேக் சுவாந்தே, தன் தொழில் முறை கால்பந்துப் பயணத்தை ஐ-லீக் தொடரில் ஆடிய பஞ்சாப்பின் ஜே.சி.டி அணியில் தொடங்கினார். அதன்பின் ஷில்லாங் லஜோங் அணியில் இணைந்தார். அடுத்து, 2014-15 ஃபெடெரேஷன் கோப்பை, 2015-16 ஐ-லீக் கோப்பைகள் வென்ற பெங்களூரு எஃப்.சி அணிக்காக விளையாடினார். முறையே, 2016, 2017-18 ஐ.எஸ்.எல் தொடர்களின் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த மும்பை சிட்டி எஃப்.சி, எஃப்.சி. புனே சிட்டி அணிகளுக்காகவும் விளையாடினார். 2019-20 சீசனில் ஒடிஷா எஃப்.சி அணிக்காக விளையாடினார். இந்திய அணிக்காக விளையாடியவரான சுவாந்தே, 2015 தெற்காசிய கால்பந்து ஃபெடரேஷன் (SAFF) சாம்பியன்ஷிப் வென்றவர்.

2012 ஐ-லீக் தொடரில், ராயல் வாஹிங்டோ அணியிலிருந்து தன் கால்பந்து பயணத்தைத் தொடங்கினார் ரீகன். ஷில்லாங்கைச் சேர்ந்த அந்த அணியோடு 3 ஆண்டுகள் தொடர்ந்தவர், ஐ.எஸ்.எல் தொடரில் ஆடிய நார்த் ஈஸ்ட் யுனைடட் கிளப்பில் இணைந்தார். அங்கு 5 ஆண்டுகளில் 69 போட்டிகளில் விளையாடினார். 2018-19 சீசன் அரையிறுதிக்குள் நுழைந்த நார்த் ஈஸ்ட் அணி, அந்த சீசனில் மோதிய 21 போட்டிகளில் இவர் 19-ல் ஆடினார் ரீகன். ஐ-லீக் அணிகளான சால்கோகார் எஸ்.சி, மும்பை எஃப்.சி அணிகளுக்கும் ஆடியிருக்கிறார்.