சென்னையின் எஃப்.சி அணியுடன் ஒப்பந்தம் கையெழுத்திட்டார்கள் இளம் வீரர்களான ரெமி அய்மோல், சமிக் மித்ரா, அமன் சேத்ரி

சென்னை, ஆகஸ்ட் 27,2020 : டிஃபண்டர் ரீம்சோசுங் ‘ரெமி’ அய்மோல் (20), கோல்கீப்பர் சமிக் மித்ரா (19) மற்றும் ஃபார்வேர்ட் அமன் சேத்ரி (19) மூவரும் சென்னையின் எஃப்.சி அணியோடு பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், 2020-21 இந்தியன் சூப்பர் லீக் சீசனுக்கான 25 பேர் அடங்கிய சென்னையின் எஃப்.சி ஸ்குவாடில், இந்த மூன்று இளைஞர்களும் சேர்க்கப்படுவார்கள் என்று கிளப் நிர்வாகம் உறுதி செய்துள்ளது. சமிக், அமன் இருவரும், சென்னையின் எஃப்.சி ‘பி’ டீமில் இருந்து ப்ரமோட் செய்யப்பட்டுள்ளனர். ரெமி, ஐ.எஸ்.எல், ஏ.ஃஎப்.சி கோப்பை போட்டிகளில் சீனியர் அணிக்கு ஏற்கெனவே 2 போட்டிகள் விளையாடியிருக்கிறார்.

இதன்மூலம், வளர்ந்துவரும் வீரர்கள் (ஜனவரி 1,2000 அன்றோ, அதற்குப் பிறகோ பிறந்தவர்கள்) 5 பேர் சென்னையின் ஸ்குவாடில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஏற்கெனவே, முன்கள வீரர் ரஹிம் அலி, மிட்ஃபீல்டர் அபிஜித் சர்கார் இருவரும் அந்த தகுதி வரம்பை பூர்த்தி செய்தவர்கள். இதன்மூலம், இந்த சீசனின் சென்னையின் எஃப்.சி ஸ்குவாடில் 25 வயதுக்குட்பட்ட வீரர்கள் 12 பேர் உள்ளனர். இது, இந்திய அளவில் சாதிக்க இளம் வீரர்களுக்கு மேடை அமைத்துக் கொடுக்கும் சென்னை அணியின் கொள்கையைக் காட்டும்.

2018-19 சீசனுக்கு முன்பாக CFC-யின் சீனியர் டீமுடன் பயிற்சி செய்த ரெமி அய்மோல், அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் இந்தியன் ஏரோஸ் அணிக்கு, லோன் மூலம் ஐ-லீக் தொடரில் விளையாடினார். அதன்பிறகு சென்னையின் அணிக்குத் திரும்பியவர், ஜூன் 2019 நேபாளத்தில் நடந்த மனாங் மார்ஷ்யாங்டி அணிக்கெதிரான ஏ.எஃப்.சி கோப்பை போட்டியில் தன் முதல் சீனியர் மேட்சை விளையாடினார். அந்தப் போட்டியில் சென்னையின், 3-2 என வென்றது.

“சென்னையின் எஃப்.சி அணியின் ஓர் அங்கமாக இருப்பது மிகச் சிறந்த அனுபவம். நான் முன்னேறவும் வளரவும் மிகப்பெரிய அளவில் கிளப் உதவியிருக்கிறது. இதை என்னுடைய இரண்டாவது வீடாகப் பாவிக்கத் தொடங்குகிறேன். இனி வரும் ஆண்டுகளில் இங்கு தொடர்ந்து விளையாடுவதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய 100 சதவிகித உழைப்பைக் கொடுக்கவும், எந்த சவாலை ஏற்கவும் தயாராக இருக்கிறேன்” என்று மனிப்பூரிலுள்ள தன் சொந்த ஊரான சந்தேலில் இருந்து கூறியிருக்கிறார் ரெமி.

சென்னையின் எஃப்.சி அண்டர் 18 டீம், ‘பி’ டீம் இரண்டிலும் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட இளம் சமிக் மித்ரா, கோல் போஸ்டுக்கு இடையே உறுதியாக நிற்கக்கூடியவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியன் ஏரோஸ் அணியில் லோன் மூலம் ஆடினார். “நான் வளர்வதற்கு சென்னையின் அணி மிகச் சிறந்த மேடை அமைத்துக் கொடுத்திருக்கிறது. இங்கு இருந்த காலகட்டத்தில், ஒரு வீரனாகவும், மனிதனாகவும் நான் பெரிய முன்னேற்றம் கண்டுள்ளேன். CFC எனக்கு இரண்டாவது குடும்பம். இங்கு நீண்ட காலம் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் ஐ.எஸ்.எல் கோப்பையை, அது இருக்கவேண்டிய இடமான சென்னைக்குக் கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று கூறினார் சமிக்.

முன்களத்தில் எந்த பொசிஷனிலும் ஆடக்கூடியவரான அமன், யூத் லெவலில் இந்திய அணிக்கும், சென்னையின் அணிக்கும் மிகச் சிறப்பாக விளையாடினார். 2019 SAFF அண்டர் 18 சாம்பியன்ஷிப் வென்ற இந்திய அணியில் ஆடியவர், இலங்கைக்கு எதிராக 3-0 என வென்ற போட்டியில் கோல் அடித்தார். முந்தைய ஐ-லீக் சீசனில் இந்தியன் ஏரோஸ் அணிக்காக லோனில் விளையாடினார்.

“சென்னையின் எஃப்.சி அணிக்காக ஒப்பந்தம் செய்ததில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். இங்கு இருந்த மூன்று ஆண்டுகளில், வீட்டில் இருப்பது போலவே உணர்ந்தேன். உணர்வுப்பூர்வமான ரசிகர்கள், நிர்வாகம், சீனியர் வீரர்கள், பயிற்சியாளர் குழு என ஒவ்வொருவரும் எனக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். சென்னையின் அணிக்காக ஐ.எஸ்.எல் தொடரில் ஆடவேண்டும் என்பது என் கனவு. என்னுடைய முழு உழைப்பையும் அணிக்காக கொடுக்கும் நேரம் வந்திருக்கிறது” என்று கூறினார் அமன்.

இது பற்றிப் பேசிய அணியின் இணை உரிமையாளர் வீதா தானி, “ரெமி, சமிக், அமன் போன்ற இளம் ரத்தங்கள் நம்மோடு தொடர்வது மகிழ்ச்சியளிக்கிறது. அவர்கள் அணிக்கு புத்துணர்வு ஊட்டுபவர்களாக இருப்பார்கள். சென்னையின் எஃப்.சி, எப்போதுமே வயதைப் பொருட்படுத்தாமல், பெரிய மேடைகளில் சோபிப்பதற்கான வாய்ப்பை இளம் வீரர்களுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறது. அவர்கள், அணியின் சீனியர் வீரர்களுக்கு ஆரம்பத்திலிருந்து கடும் போட்டியளிப்பதோடு, அடுத்தடுத்த வருடங்களில் பெரும் முன்னேற்றம் அடைவார்கள் என்று தீர்க்கமாக நம்புகிறேன்” என்று கூறினார்.

இந்த மூன்று இளம் வீரர்களுமே 2017-ம் ஆண்டு அனைத்தியந்திய கால்பந்து கூட்டமைப்பின் அகாடெமியிலிருந்து வந்து, உடனே சென்னையின் எஃப்.சி அணியில் இணைந்தவர்கள். சென்னையின் எஃப்.சி ‘பி’ டீமில் இணைந்து, ஐ-லீக் இரண்டாவது டிவிஷனிலும் மற்ற தேசிய தொடர்களிலும் ஆடினார்கள். சமிக், அமன் இருவரும் அனைத்திந்திய கால்பந்து கூட்டமைப்பின் அண்டர் 18 தொடரில், சென்னையின் எஃப்.சி அண்டர் 18 அணிக்காக விளையாடினார்கள். 2019-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டுராண்ட் கோப்பையில் சமிக், ரெமி இருவரும் சென்னையின் எஃப்.சி-பி அணிக்காக விளையாடினார்கள். பிப்ரவரி 2020-ல் நார்த் ஈஸ்ட் அணிக்கெதிரான போட்டியில் தன் அறிமுக ஐ.எஸ்.எல் போட்டியில் ஆடினார் ரெமி!