சென்னையின் எஃப்.சி ஒப்பந்தத்தை நீட்டித்தார் ரஃபேல் கிரிவெல்லாரோ!

சென்னை, ஆகஸ்ட் 16, 2020: பிரேசில் நடுகள வீரர் ரஃபேல் கிரிவெல்லாரோ, சென்னை அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டித்துக் கையெழுத்திட்டிருக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு அறிவித்துக்கொள்கிறோம். இரண்டு முறை ஐ.எஸ்.எல் சாம்பியன் ஆன சென்னையின் அணிக்காக, 2020-21 சீசனில் அவர் விளையாடுவார்.

இந்தியாவில் தான் ஆடிய முதல் சீசனிலேயே, 7 கோல்கள், 8 அசிஸ்ட்கள் என அசத்தி, சென்னையின் அணி இறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கு மிகமுக்கியக் காரணமாக அமைந்தார் இந்த 31 வயது ‘பிளேமேக்கர்’. கேரளா பிளாஸ்டர்ஸ், ATK அணிகளுக்கு எதிரான போட்டிகளில் முக்கியமான கோல்கள் அடித்த கிரிவெல்லாரோ, நார்த் ஈஸ்ட் அணிக்கெதிரான போட்டியில், 55 யார்ட் தூரத்தில், நடு களத்திலிருந்து அடித்த கோல், அந்த சீசனின் மிகச் சிறந்த கோல்களுள் ஒன்று!

“சென்னையின் எஃப்.சி அணியோடு தொடர்வதில் மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடந்த ஆண்டு அமைந்த ஓர் அட்டகாசமான சீசனுக்குப் பிறகு, இங்கு தொடரவேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். இந்த ரசிகர்களுக்காக ஆடுவதைப் பெருமையாக நினைக்கிறேன். அவர்களுக்கு விரைவில் கோப்பை வென்று தருவோம் என்று நம்புகிறேன். நம் இலக்கை அடைவதற்கு, நம்பிக்கையோடு கடினமாக உழைக்கவேண்டும்” என்று கூறினார் கிரிவெல்லாரோ.

“ரஃபேல் (கிரிவெல்லாரோ) நம் மிகச் சிறந்த பெர்ஃபாமர்களுள் ஒருவர். அவர் நம்மோடு தொடர்வது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. கடந்த சீசனில், தன்னுடைய சிறப்பான ஆட்டத்தால், ரசிகர்கள் கொண்டாடுவதற்கு பல்வேறு நினைவுகளை ஏற்படுத்தியிருக்கிறார். அதுபோன்ற பெர்ஃபாமன்ஸ் இந்த சீசனிலும் தொடரும் என்று எதிர்பார்க்கிறோம். அவர் நிச்சயம் அதைக் கொடுப்பார் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார் அணியின் இணை-உரிமையாளர் வீதா தாணி. எலி சாபியாவைத் தொடர்ந்து, இரண்டாவது பிரேசில் வீரராக கிரிவெல்லாரோ சென்னை அணியுடனான ஒப்பந்தத்தை நீட்டித்துள்ளார்.

2019-20 சீசனுக்காக சென்னையின் எஃப்.சி அணியில் இணைந்த கிரிவெல்லாரோ, விரைவிலேயே அணியின் மையப்புள்ளியாக மாறினார். அனிருத் தாபா, எட்வின் சிட்னி போன்றவர்களோடு நன்றாக இணைந்து ஆடி, பந்தை நடகளத்திலிருந்து அட்டாகிங் தேர்டுக்குக் கொண்டு செல்வதில் முக்கிய அங்கமாய் விளங்கினார். மொத்த லீகிலும், அதிக ‘கீ பாஸஸ்’ கொடுத்தவர் அவர்தான்! நுட்பம், ஆட்டத்திறன், நிதானம் அனைத்தும் கலந்த அவரது ஆட்டம், எதிரணி வீரர்களைக் கலங்கடித்து, தொடரின் பிற்பாதியில் சென்னை வெற்றி நடை போடுவதற்கு மிகமுக்கியக் காரணமாக அமைந்தது. கடந்த சீசனில் விட்ட இடத்திலிருந்து தொடங்குவதே, கிரிவெல்லாரோவின் இலக்காக இருக்கும்!

போர்டோ அலேக்ரே நகரில் பிறந்த கிரிவெல்லாரோ, தன்னுடைய சீனியர் கரியரை பிரேசிலில்தான் தொடங்கினார். அதன்பிறகு போர்ச்சுகலின் முன்னணி அணியான விடோரியா கிமாரஸில் நான்கு ஆண்டுகள் விளையாடினார். விடோரியா அணிக்கு ஆடியபோது, 2012-13 ‘டகா டி போர்ச்சுகல்’ (போர்ச்சுகலின் FA கோப்பை) கோப்பையை வென்றவர், யூரோப்பா லீக் தொடரிலும் பங்கேற்றார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் அஜ்மான் கிளப், போலாந்தின் விஸ்லா கிரகோவ், போர்ச்சுகீஸ் பிரிமீரா லிகாவின் எஃப்.சி.அரோகா, சி.டி.ஃபெய்ரென்ஸ், இரானின் செபஹன் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார் கிரிவெல்லாரோ. அரோகா அணிக்காகவும் யூரோப்பா லீக் தொடரில் விளையாடியிருக்கிறார்!