சென்னையின் எஃப்.சி-யில் இணைந்தார் போஸ்னியன் டிஃபண்டர் எனெஸ் சிபோவிச்!

சென்னை, செப்டம்பர் 21, 2020: 2020-21 ஐ.எஸ்.எல் சீசனுக்கான சென்னையின் எஃப்.சி அணியில், போஸ்னியாவைச் சேர்ந்த சென்டர் டிஃபண்டர் எனெஸ் சிபோவிச் இணைந்திருக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். 6’6″ உயரம் கொண்ட சிபோவிச், ஃப்ரீ டிரான்ஸ்ஃபர் மூலம் சென்னையின் எஃப்.சி அணியில் இணைந்திருக்கிறார். இதற்கு முன் கத்தாரின் முன்னணி கிளப்பான உம் சலால் எஸ்.சி அணியில் விளையாடிவந்தார். இந்த புதிய சீசனில், ரீகன் சிங், சுவாந்தே ஃபனாய் ஆகியோருக்குப் பிறகு சென்னையின் எஃப்.சி-யில் இணையும் மூன்றாவது வீரர் ஆகிறார் சிபோவிச்.

ஐ.எஸ்.எல் தொடரில் விளையாடப்போகும் முதல் போஸ்னிய வீரரான சிபோவிச்சுக்கு கடந்த வாரம் தான் 30 வயது நிறைவடைந்தது. இந்தியாவில் விளையாடுவதற்கும், சென்னையின் எஃப்.சி தலைமைப் பயிற்சியாளர் சபா லாஸ்லோவோடு இணைந்து பணியாற்றவும் ஆவலோடு இருக்கிறார் அவர். “இந்தியாவில்தான் அடுத்து விளையாடுவேன் என்று எனக்குள் தோன்றிக்கொண்டே இருந்தது. இதுபோன்ற ஓர் அற்புதமான கிளப்பில் இணைவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 2014-ம் ஆண்டு மார்கோ மடரசியின் தலைமையில் தொடங்கிய முதல் சீசனிலிருந்து சென்னையின் எஃப்.சி-யை பின்தொடர்கிறேன். மிகவும் வெற்றிகரமான இந்த அணிக்கு ஈடு இணையற்ற ரசிகர் கூட்டம் இருப்பதை நான் அறிவேன். அடுத்த சீசனுக்காக இப்போதே ஆவலாகக் காத்திருக்கிறேன். இது மிகச் சிறந்த அனுபவமாக இருக்கும்” என்று கூறினார் சிபோவிச். தற்போது அவர் போஸ்னிய தலைநகர் சரயேவோவில் உள்ள தன் சொந்த ஊரில் இருக்கிறார்.

“சென்னையின் எஃப்.சி அணியிலும் ஐ.எஸ்.எல் தொடரிலும் சிறப்பாகச் செயல்படுவதற்குத் தேவையான அனைத்து விஷயங்களையும் கொண்டிருக்கிறார் எனெஸ் (சிபோவிச்). அவரது உயரம் மிகச்சிறந்த ஏரியல் பிரசன்ஸைக் கொடுக்கும். அதோடு அவர் பாலை கன்ட்ரோல் செய்வதிலும் பாஸ் செய்வதிலும் தேர்ந்தவர். எலி சாபியாவுடன் இணைந்து மிகச் சிறந்த டிஃபன்ஸிவ் கூட்டணியை அமைப்பார். அதோடு, இளம் இந்திய வீரர்களை வழிநடத்த அவர் சரியான தேர்வு. ஆசியாவின் கடினமான தட்பவெட்ப சூழ்நிலைகளைக் கொண்ட கத்தார், சவூதி அரேபியா போன்ற நாடுகளில் விளையாடியுள்ள அவர், நிச்சயம் இந்தியாவில் சிறப்பாகச் செயல்படுவார்” என்று இந்த சீசனுக்கு வாங்கப்பட்ட முதல் வெளிநாட்டு வீரர் பற்றிக் கூறினார் பயிற்சியாளர் சபா லாஸ்லோ.

சிபோவிச், போஸ்னியா அண்ட் ஹெர்சகோவினா அண்டர் 21 அணியின் முன்னாள் வீரர். ஈடன் ஜெகோவை உருவாக்கிய சரயேவோவின் எஃப்.கே செலியஸ்னிகார் அகாடெமியிலிருந்து வந்தவர். 2010-11 சீசனில் ரொமானியாவின் டாப் டிவிஷனை வென்ற ஒதேலுல் கலாதி அணியில் ஆறு ஆண்டுகள் விளையாடினார். ரோமன் லிகா 1 தொடரில், சென்னையின் அணியின் முன்னாள் கேப்டன் லூசியன் கோயனை எதிர்த்து விளையாடியிருக்கிறார் சிபோவிச்.

அதன் பிறகு, பெல்ஜியம் (கே.வி.சி.வெஸ்டீரியோ), மொராக்கோ (இட்டிஹாட் டாஞ்சர், ஆர்.எஸ்.பெர்கேன்) போன்ற நாடுகளில் ஆடிவிட்டு ஆசியாவிற்கு வந்தார். சவூதி அரேபியாவின் ஒஹோத் கிளப்பில் இணைந்தவர், பின்னர் தன் பழைய அணியானா எஃப்.கே செலியஸ்னிகாரில் இணைந்தார். கடந்த சீசன், கத்தாரின் உம் சலால் அணியில் இணைந்து ஆடினார்.