ஜெர்மன்ப்ரீத் சிங் ஒப்பந்தம் நீட்டிப்பு சென்னையின் எஃப்.சி-யில் தொடர்கிறார்!

சென்னை, ஆகஸ்ட் 23, 2020: இந்திய மிட்ஃபீல்டர் ஜெர்மன்ப்ரீத் சிங், சென்னையின் எஃப்.சி உடனான ஒப்பந்தத்தை நீட்டித்திருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.

பஞ்சாபைச் சேர்ந்த இந்த 24 வயது இளைஞன் தொடர்ந்து நான்காவது சீசனாக சென்னையின் எஃப்சி ஜெர்ஸியை அணிந்து, 2020-21 இந்தியன் சூப்பர் லீக்கில் பங்கேற்க உள்ளார். இந்த நான்கு ஆண்டுகளில் ஜெர்மன்ப்ரீத், சென்னையின் எஃப்.சி அணிக்காக 36 போட்டிகளில் பங்கேற்றுள்ளார். கடந்த சீசனில் மிட்ஃபீல்டில் இவர் காட்டிய அசுரத்தனமான ஆட்டம், ஆறு ஆண்டுகளில் மூன்றாவது முறையாக ‘மெரினா மச்சான்ஸ்’, ஐ.எஸ்.எல் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஒரு காரணமாக இருந்தது.

“சென்னையின் எஃப்.சி-க்காக தொடர்ந்து விளையாடுவதை பெருமையாகக் கருதுகிறேன். மூன்று ஆண்டுகள் இங்கு விளையாடி இருக்கிறேன். இதுவரையிலான பயணத்தில் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். பல விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதையும் அறிவேன். சென்னை எனது இரண்டாவது தாய் வீடு மாதிரி. சென்னையின் எஃப்.சி.யும், அன்பான ரசிகர்களும் எனது குடும்பம் போல’’ என, தன் ஒப்பந்த நீட்டிப்பு குறித்து பஞ்சாப் குர்தஸ்பூரில் உள்ள வீட்டில் இருந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் ஜெர்மன்ப்ரீத்.

“இந்திய வீரர்களில் மற்றுமொரு திறமையான வீரர் ஜெர்மன்ப்ரீத். எங்களுடன் இணைந்ததில் இருந்து அவர் தன் திறமையை பல மடங்கு அதிகரித்துள்ளார். ஜெர்மன்ப்ரீத் போன்ற இளம் உள்ளூர் வீரர்களை அடையாளம் கண்டு, அவர்களை மெருகேற்றி, ஐ.எஸ்.எல் போன்ற பெரிய அரங்கில் தங்கள் திறமையை வெளிப்படுத்த களம் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். ஆக்ரோஷமும், ஆவேசமும் நிறைந்த இந்த இளைஞனின் திறமை வரும் சீசன்களில் எங்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.’’என, சென்னையின் எஃப்.சி-யின் இணை உரிமையாளர் வீதா தானி தெரிவித்துள்ளார்.

அகில இந்திய கால்பந்து ஃபெடரேஷனின் (AIFF) எலைட் அகாடமியில் இருந்து உருவெடுத்த ஜெர்மன்ப்ரீத், 2015-ல் கோவாவை மையமாகக் கொண்டு செயல்படும் டெம்போ எஸ்.சி கிளப் மூலம் ஐ-லீக்கில் பங்கேற்று, தன் தொழில்முறை கால்பந்து பயணத்தைத் தொடங்கினார். பின், மினர்வா பஞ்சாப் எஃப்.சி-யில் இணைந்து அதே ஐ- லீக் போட்டிகளில் விளையாடினார். 2017-18 சீசனில், சென்னையின் எஃப்.சி அணி ஜெர்மன்ப்ரீத்தை வாங்கியது. அந்த சீசனில் சென்னையின் எஃப்.சி இரண்டாவது முறையாக ஐ.எஸ்.எல் கோப்பை வென்றதில், அவருக்கும் பங்கு இருக்கிறது. அதைத் தொடர்ந்து அடுத்தடுத்த சீசனில் ஜெர்மன் ப்ரீத் சென்னையின் எஃப்.சியின் நடுக்களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். குறிப்பாக, இக்கட்டான நேரத்தில் பெஞ்சில் இருந்து வந்து, அணி வெற்றிபெற உதவியிருக்கிறார். 2019-20 சீசனில் இந்திய அணியின் மற்றுமொரு முக்கியமான மிட்ஃபீல்டரான அனிருத் தாப்பா, ஜெர்மன்ப்ரீத் இருவரும் மிட்ஃபீல்டில் அட்டகாசமான ஒரு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி, சென்னையின் எஃப்.சி. இறுதிப் போட்டிக்கு செல்ல முக்கிய பங்காற்றினர்.

திறமையான மிட்ஃபீல்டரான ஜெர்மன்ப்ரீத், அனைத்து மட்டத்திலான இளையோர் பிரிவிலும் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார். 2016 ஆகஸ்ட் மாதம், பூடானுக்கு எதிரான நட்பு போட்டியின்போது முதன்முறையாக இந்திய அணியில் இடம்பிடித்தார். இதுவரை அவர் இந்தியாவுக்காக ஒன்பது போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.