விடைபெற்றார் சென்னையின் எஃப்.சி ஜாம்பவான் ஜேஜே லால்பெக்லுவா!

சென்னை, செப்டம்பர் 12,2020 : ஆறு ஆண்டுகள் அணியின் பிரதான ஸ்டிரைக்கராக, ரசிகர்களின் ஆஸ்தான நாயகனாக விளங்கிய ஜேஜேவுக்கு விடைகொடுத்திருக்கிறது சென்னையின் எஃப்.சி. சென்னையின் எஃப்.சி அணியின் ஜாம்பவானாக, சென்னையின் வளர்ப்புப் பிள்ளையாக விடைபெற்றிருக்கும் ஜேஜே, இதுவரை 76 போட்டிகளில் சென்னையின் எஃப்.சி அணிக்காக ஆடியிருக்கிறார். இதுநாள் வரை கிளப்புக்காக அதிக போட்டிகளில் விளையாடியவர் இவர்தான்!

மிசோரமின் ஹ்னாதியாலில் பிறந்த ஜேஜே, தன் அபார கோல் ஸ்கோரிங் திறனுக்காக, ‘மிசோ ஸ்னைப்பர்’ என்று அழைக்கப்பட்டார். இதுவரை சென்னையின் எஃப்.சி அணிக்காக அனைத்துத் தொடர்களிலும் சேர்ந்து 25 கோல்கள் அடித்திருக்கும் இவரே, கிளப்பின் டாப் கோல் ஸ்கோரர். ஒவ்வொரு சீசனிலும் அணியின் அட்டாக்கை மிகச் சிறப்பாக வழிநடத்திய அவர், 2015 சீசனிலும், 2017-18 சீசனிலும் சாம்பியன் பட்டம் வென்றதில் மிகமுக்கிய அங்கம் வகித்தார்.

மெரீனா அரேனாவில் தன்னுடைய பயணத்தை மிகச் சிறப்பாகத் தொடங்கிய ஜேஜே, முதல் ஐ.எஸ்.எல் சீசனில் 4 கோல்களும் 1 அசிஸ்டும் செய்தார். அந்த சீசனில் அதிக கோல்கள் அடித்த இந்திய வீரர் இவர்தான். இரண்டாவது சீசனில் சென்னையின் எஃப்.சி சாம்பியன் பட்டம் வென்றபோது 6 கோல்கள் அடித்ததோடு, 3 அசிஸ்டும் செய்து அசத்தினார். அந்த அற்புதமான செயல்பாட்டுக்காகவும், அவர் ஆட்டம் ஏற்படுத்திய தாக்கத்திற்காகவும், 2015 ஐ.எஸ்.எல் தொடரின் வளர்ந்து வரும் வீரர் விருதை வென்றார் ஜேஜே. கிளப்புக்கும் தேசிய அணிக்கும் மிகச் சிறப்பான பங்களிப்பைக் கொடுத்தவருக்கு ‘ஆண்டின் சிறந்த வீரர்’ விருதை வழங்கியது அனைத்திந்திய கால்பந்து சங்கம். 2015-16 சீசனுக்கான இந்திய கால்பந்து வீரர்கள் சங்கமும் அவருக்கு ஆண்டின் சிறந்த வீரர் விருதை வழங்க, அவரது கால்பந்து வாழ்க்கையின் மிகச் சிறந்த சீசனாக அது அமைந்தது.

2017-18 சீசனில், இந்த மிசோரம் வீரரின் செயல்பாடு இன்னும் அசத்தலாக இருந்தது. சென்னையின் எஃப்.சி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற அந்த ஆண்டு, 9 கோல்கள் (மற்றும் 1 அசிஸ்ட்) அடித்து அசத்தினார் ஜேஜே. ஒரு சீசனில் அவரின் சிறந்த செயல்பாடு இதுதான். இந்தக் காலகட்டத்தின் ஜேஜேவின் ‘ஸ்னைப்பர்’ செலிபிரேஷன் சென்னை ரசிகர்களின் ஃபேவரிட்டாக அமைந்தது.

இந்த 6 ஆண்டுகளில் பல இடங்களில் தன் பெயரைப் பதித்திருக்கிறார் ஜேஜே. முதல் ஐ.எஸ்.எல் சீசனின் டாப் இந்திய கோல் ஸ்கோரரான இவர்தான், சென்னையின் எஃப்.சி சாம்பியனான இரண்டு சீசன்களில் முறைய டாப் இந்திய கோல் ஸ்கோரர், டாப் கோல் ஸ்கோரர்! ஆசிய அளவில் செனையின் எஃப்.சி அணியின் முதல் கோலை அடித்ததும் இவரே! 2019 ஏ.ஃப்.சி கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் கொழும்பு எஃப்.சி அணிக்கெதிராக 1-0 என வெற்றி பெற்ற போட்டியில், அந்த வின்னிங் கோலை அடித்தது ஜேஜேதான். 2018-19 சீசன் வரை, ஐ.எஸ்.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் கோலடித்திருந்த ஒரே ஆள் ஜேஜே! ஐ.எஸ்.எல் தொடரில் கிளப்புக்காக அதிகபட்சமாக 23 கோல்கள் அடித்திருப்பவர், இப்போது சென்னையின் எஃப்.சி அணிக்கு விடைகொடுத்திருக்கிறார்.

“சென்னையின் எஃப்.சி என்றாலே ஜேஜேவின் பெயர் நினைவுக்கு வரும். நமது கிளப்புக்காகவும் ரசிகர்களுக்காகவும் மிகச் சிறப்பான முறையில் உழைத்திருக்கிறார். எந்தவொரு குறையும் சொல்ல முடியாத ஒரு புரொஃபஷனல் வீரர் அவர். இந்திய கால்பந்தின் மிகச் சிறந்த ரோல் மாடல், இன்ஸ்பிரேஷன். இந்த 6 ஆண்டுகளில் சென்னையின் எஃப்.சி அணியின் ஒவ்வொரு பயணத்திலும் அவருடைய தன்னிகிரல்லாத பங்களிப்புக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். அவருடைய எதிர்கால பயணம் சிறக்க வாழ்த்துகிறோம்” என்று சென்னையின் எஃப்.சி அணியின் இணை உரிமையாளர்கள் தங்கள் கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

சென்னையின் எஃப்.சி அணியில் ஜேஜே எப்போதுமே நினைவு கூறப்படுவார். கொண்டாடப்படுவார். அவருடைய ஐகானிக் செலிபிரேஷனும், பணிவான அணுகுமுறையும் மிஸ் செய்யப்படும்!