2020-21 சீசனுக்கு அனிருத் தாபா உள்பட 10 இந்திய வீரர்களின் பங்கேற்பை உறுதி செய்தது சென்னையின் எஃப்.சி

சென்னை, ஆகஸ்ட் 20,2020: சென்னையின் எஃப்.சி அணி, நட்சத்திர நடுகள வீரர் அனிருத் தாபா உள்பட 10 இந்திய வீரர்கள் இந்த சீசனில் சென்னையினுக்காகப் பங்கேற்பதை உறுதி செய்துள்ளது. 2017-18 ஐ.எஸ்.எல் சீசன் வின்னரான அனிருத் தாபா, 18 வயது வீரராக (2016-ம் ஆண்டு) சென்னை அணியில் இணைந்தார். இரண்டு முறை ஐ.எஸ்.எல் பட்டம் வென்ற சென்னை அணியோடு பல ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ள அவர், இந்த ஐந்தாவது சீசன் கடந்தும் சென்னையின் அணியோடு தொடர்வார்!

2018-ம் ஆண்டு அனைத்திந்திய கால்பந்து சங்கம் வழங்கிய ‘வளர்ந்து வரும் வீரர்’ விருதை வென்ற தாபா, இன்னும் 9 இந்திய வீரர்களோடு இணைந்து சென்னையின் அணியோடு தொடரப்போகிறார். தோய் சிங், தனபால் கனேஷ், ஶ்ரீனிவாசன் பாண்டியன், எட்வின் சிட்னி வன்ஸ்பால், விஷால் கெய்த், லாலின்சுவாலா சாங்டே, தீபக் தாங்ரி, ரஹீம் அலி ஆகிய அனைவரும் 2020-21 சீசனிலும் தொடர்வதற்கான ஒப்பந்தம் கொண்டிருக்கிறார்கள். கடந்த சீசனில், ஈஸ்ட் பெங்கால் அணிக்கு லோனில் ஆடிய நடுகள வீரர் அபிஜித் சர்காரும் சென்னையின் அணிக்கு மீண்டும் திரும்பியிருக்கிறார்.

இது பற்றிப் பேசிய சென்னையின் எஃப்.சி அணியின் இணை உரிமையாளர் வீதா தாணி, “நம் அணியின் ‘கோர்’ வீரர்கள் நம்மோடு தொடர்வது மிகப்பெரிய சந்தோஷம். கடந்த சீசனின் சிறப்பான செயல்பாட்டை இன்னும் சிறப்பாக்கவேண்டும் என்ற கடமை இருக்கிறது. தாபா போன்ற இந்திய வீரர்கள் இருப்பது, நாம் அதை அடைவதற்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். குறிப்பாக, கிளப் அளவிலும் தேசிய அளவிலும், இந்த இளம் வயதில் தாபாவின் எழுச்சியைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு முன் இளம் வீரராக நம் அணியில் இணைந்ததிலிருந்து, தொடர்ந்து முன்னேற்றம் அடைந்துகொண்டிருக்கும் அவர், இப்போது ஃபர்ஸ்ட் லெவனின் மிகமுக்கிய அங்கமாக மாறியிருக்கிறார்” என்று கூறினார்.

இந்திய கால்பந்து சங்கத்தின் எலைட் அகாடெமியிலிருந்து 2016-ம் ஆண்டு வந்தவர் தாபா. சென்னையின் எஃப்.சி, பிரெஞ்சு கிளப்பான எஃப்.சி மெட்ஸ் அணியுடன் சேர்ந்து பிரான்ஸில் நடத்திய பயிற்சி முகாமில் பெரும் பலன் அடைந்தார். அங்கிருந்து திரும்பியவர், மார்கோ மடரஸி தலைமையிலான சென்னையின் எஃப்.சி அணியின் சீனியர் ஸ்குவாடில் இணைந்தார். அந்த டேரா டூன் சிறுவனின் திறமை கண்டு வியந்த மடரஸி, 2016 சீசனில் கோவா அணியுடன் ஆடிய கடைசி லீக் போட்டியில், தாபாவுக்கு அறிமுக வாய்ப்பைக் கொடுத்தார்.

இங்கிலாந்தைச் சார்ந்த பயிற்சியாளர் ஜான் கிரகரியின் தலைமையிலான அடுத்த சீசன், அவருக்கு மிகப்பெரிய திருப்புமுணையாக அமைந்தது. சென்னையின் எஃப்.சி கோப்பை வென்ற அந்த சீசனில், 16 போட்டிகளில் விளையாடி 2 கோல்கள் அடித்த தாபா, ஒரு அசிஸ்ட்டும் செய்தார். அந்த 22 வயது வீரரின் அபார வளர்ச்சி, இந்திய அணியில் அவருக்குத் தொடர்ச்சியான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்தது. 2019-ம் ஆண்டு, தாய்லாந்து அணிக்கெதிரான ஏ.எஃப்.சி ஆசிய கோப்பைப் போட்டியில், இந்திய அணிக்காகத் தன் முதல் கோலை ஸ்கோர் செய்தார் தாபா.

“சென்னையின் எஃப்.சி-யில் இருக்கும் ஒவ்வொருவரும், கோப்பை வெல்லவேண்டும் என்ற விஷயத்தில் முன்பு எப்போதும் இருந்ததைவிட அதிக முனைப்போடு இருக்கிறோம். கடந்த ஆண்டு நம்மை இறுதிப் போட்டிக்கு எடுத்துச் சென்ற அந்த மனநிலையை இப்போதும் தொடரவேண்டும். மீண்டும் என் அணி வீரர்களோடு இணைந்து பயிற்சி செய்யக் காத்திருக்கிறேன்” என்று கூறினார் அனிருத் தாபா. இந்திய அணிக்காக 24 போட்டிகளில் ஆடியிருக்கும் அவர், ஐ.எஸ்.எல் பிளே ஆஃப் சுற்றில் கோலடித்த இளம் வீரர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். 2017-18 சீசனில் கோவா அணிக்கெதிராக அந்த கோலை அடித்தபோது அவர் வயது 20!

இதுவரை சென்னையின் எஃப்.சி அணிக்காக 68 போட்டிகளில் ஆடியிருக்கும் தாபா, இந்த சீசனுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார். 2020-21 சீசன் முழுவதும் கோவாவில் நடக்கும் என்று ஐ.எஸ்.எல் நிர்வாகம் அறிவித்திருக்கிறது. சென்னை அணியின் 9 ஹோம் கேம்களும் ஜி.எம்.சி அத்லெடிக் ஸ்டேடியத்தில் நடைபெறும். மும்பை சிட்டி, கேரளா பிளாஸ்டர்ஸ், ஒடிசா எஃப்.சி ஆகிய மற்ற மூன்று அணிகளின் ஹோம் கேம்களும் அதே மைதானத்தில்தான் நடக்கும். கடந்த ஆண்டு, பிளே ஆஃப் மற்றும் பைனலுக்கு முன்பாக இந்த மைதானத்தில் பயிற்சிகளில் பங்கேற்றதால், இது சென்னையின் எஃப்.சி வீரர்களுக்குப் பழக்கமான ஒன்றுதான்!